கல்லணை தண்ணீர் வந்ததால் விவசாய பணிகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கல்லணை தண்ணீர் வந்தடைந்ததை தொடர்ந்து நெல் நடவு, நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12–ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அணை தாமதமாக திறக்கப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அணை ஜூன் 12–ந்தேதி திறக்கப்படவில்லை. இதையடுத்து கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணையின்நீர் மட்டம் 95 அடியை எட்டியது.
இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை கடந்த 2–ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததைதொடர்ந்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் கடந்த 5–ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளது. இதையடுத்து விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய கால நெல் ரகமான கோ–50, ஆடுதுறை 46, ஆடுதுறை 50, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, சுவர்ணாசப்–1 மற்றும் குறுகிய கால நெல் ரகமான கோ–51 ஆகிய ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதற்காக வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 மானியமும் வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் சம்பா சாகுபடி 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கரிலும், தாளடி 67 ஆயிரத்து 500 ஏக்கரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான உரங்கள், விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 9 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பும் செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரம் ஏக்கரில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.
இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், ‘‘தஞ்சை மாவட்டத்தில் சம்பா நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்குமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். எனவே சம்பா பணிகள் இந்த மாதத்துக்குள் முடிந்து விடும். குறுவை அறுவடை செய்யப்பட்ட இடங்களில் தாளடி சாகுபடி நடைபெறுகிறது. இந்த தாளடி சாகுபடி மட்டும் நவம்பர் 15–ந்தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தஞ்சை மாவட்டத்தில் கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியில் மட்டும் நடவு பணிகள் சற்று தாமதமாகும்’’என்றார்.