2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி பிடித்தனர்


2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:45 AM IST (Updated: 8 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் 2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அப்போது, இடையில் புகுந்த ஒரு கும்பல் போலீசாரை தாக்கிவிட்டு பணத்துடன் அந்த வாலிபரை மீட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் 2 கோடி ஹவாலா பணம் கடத்தி செல்வதாக நேற்று காலையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க போலீசார் குழித்துறை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீசார் கைகாட்டி நிற்கும் படி கூறினர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை, மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர்.

மேலும் இந்த தகவலை களியக்காவிளை சோதனை சாவடி போலீசாருக்கும் தெரிவித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் சோதனை சாவடி போலீசாருக்கும் ‘டிமிக்கி‘ கொடுத்து விட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து போலீசார், களியக்காவிளை அருகே இஞ்சிவிளை சோதனைசாவடியில் உள்ள போலீசாரை உஷார் படுத்தினர். அவர்கள் அந்த பகுதியில் தடுப்புகளை போட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் வைத்திருந்த பையையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டு- கட்டாக 2 கோடி ஹவாலா பணம் இருந்தது. அந்த பணம் யாருக்கு சொந்தமானது? எப்படி கிடைத்தது? என்று அவர்கள் விசாரித்து கொண்டிருந்தனர்.

விசாரணை நடத்திய போலீசார் அனைவரும் சாதாரண உடையில் இருந்ததால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் போலீசாரிடம் என்ன விவரம் என்று கேட்டு கொண்டிருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்த 4 பேர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் அந்த கூட்டத்திற்குள் புகுந்தனர். போலீசார் விசாரணை நடத்திய வாலிபரை சூழ்ந்து கொண்ட அந்த கும்பல், அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீசாரின் பிடியில் இருந்து மீட்டதோடு, கூடிநின்ற போலீசாரையும், பொது மக்களையும் சரமாரியாக தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பும்- பதற்றமும் ஏற்பட்டது. கையில் சிக்கிய வாலிபரை கும்பல் மீட்டு சென்றதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். இது பற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் போலீசாரை தாக்கிவிட்டு மீட்டு சென்ற வாலிபரையும், அந்த கும்பலையும், அவர்கள் பறித்து சென்ற 2 கோடி பணப்பையையும் கண்டுபிடித்து மீட்க குமரி - கேரள எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி உஷார் படுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story