டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்: பழைய டயர்களை அகற்றாத கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு


டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்: பழைய டயர்களை அகற்றாத கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 8 Oct 2017 4:30 AM IST (Updated: 8 Oct 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூரில் பழைய டயர்களை அகற்றாத கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கி சுகாதார அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி மேற்பார்வையில், திட்ட அதிகாரி கவிதா ஆலோசனையின் பேரில், சுகாதார பிரிவு அதிகாரிகள், உள்ளாட்சி துறை அதிகாரிகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி, வீடு, வீடாக கள ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக உள்ளவற்றை அகற்றியும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீடுகள், வணிக நிறுவன வளாகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர்- ஈரோடு ரோட்டில் சோழன் நகரில் பழைய டயர்கள் ஒரு குடோனில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை இருந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் மற்றொரு சிவக்குமார், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி செயலாளர் சசிக்குமார் மற்றும் அதிகாரிகள் அந்த குடோனில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குடோனின் வெளிப்புற பகுதியில் ஏராளமான டயர்கள் குவிந்து கிடந்தன. அதில் பெரும்பாலானவற்றில் மழைநீர் தேங்கி இருந்தது. இதேபோல குடோனின் உள்பகுதியிலும் டயர்கள் குவிந்து கிடந்தன. இதை யடுத்து அங்கும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டயர்களில் தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தன. மேலும் டயர்களை அகற்றி பார்க்கும் போது அதில் இருந்து ஏராளமான கொசுக்கள் வெளியேறின. இதையடுத்து அந்த குடோனின் உரிமையாளருக்கு சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்து நாளை (திங்கட்கிழமை)க்குள் பழைய டயர்களை அகற்றுமாறு உத்தரவிட்டு நோட்டீசு வழங்கினர். மேலும் அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதமும், அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதேபோல கோவை ரோட்டில் பழைய டயர்கள் வாங்கி விற்பனை செய்யும் 2 கடைகளிலும் சோதனை நடத்தி எச்சரித்து உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கினர்.

இந்த சோதனை குறித்து சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் டெங்கு கொசு உற்பத்தி காரணமாக உள்ளவற்றை அகற்றாத வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பழைய டயர்கள் விற்பனையாளர்கள் என மொத்தம் 25 பேருக்கு நோட்டீசு வழங்கி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

Related Tags :
Next Story