கட்சியில் இருந்து சென்றவர்களின் நிலை என்ன? குட்டிக்கதை கூறி எடப்பாடி பழனிசாமி விளக்கம்


கட்சியில் இருந்து சென்றவர்களின் நிலை என்ன? குட்டிக்கதை கூறி எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:45 AM IST (Updated: 8 Oct 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

கட்சியில் இருந்து சென்றவர்களின் நிலை என்ன? என்பது குறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குட்டிக் கதை கூறி விளக்கினார்.

தர்மபுரி,

இந்த அரசு பொறுப்பேற்ற 16.2.2017 முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் நிறைவடைந்த மக்கள் நலத்திட்டங்களை நான் ஒவ்வொரு விழாவிலும் சுருக்கமாக அறிவித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் இந்தத் திட்டங்களால் பலன் அடைந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த நல்லாட்சியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சிலர் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியடையாமல், அரசு பலன்களை அனுபவித்துக்கொண்டு அரசை குறைகூறுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இறைவனாலும் திருப்திப்படுத்த முடியாது. இதை கூறுகிற போது எனக்கு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு கிராமத்தில் அடர்ந்த இலைகளும், பூக்களும் கூடிய ஒரு மரம் இருந்தது. அம்மரத்தில் உள்ள இலைகள் இதமான காற்றினை அங்குள்ள மக்களுக்கு வழங்கி வந்தது. அம்மரத்தின் பூக்கள் மக்கள் மனங்களை கவரும் வகையில் நறுமணம் மிக்கவைகளாக இருந்தன. அந்த கிராம மக்கள் எல்லாம் நிழலுக்காக அந்த மரத்தின் அடியில் அமர்ந்து, அந்த மரம் தரும் நறுமணம் கலந்த இதமான காற்றினை சுவாசித்தும், அனுபவித்தும் வந்தார்கள்.

இதனைப் பார்த்த அந்த மரத்தில் உள்ள ஒரு பூ என்னால் தான் இந்த மக்கள் இதமான, நறுமண காற்றின் சுகத்தினை அனுபவிக்கிறார்கள்

என்று கர்வமாக நினைத்தது. அந்த நேரத்தில் காற்றானது பூவிடம், “நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். உன்னால்தான் இந்த மரத்திற்கே பெருமை. நீ இல்லையென்றால், இம்மரத்தினால் இதமான நறுமண காற்றை அளிக்க முடியாது. இதனால் மரத்திற்கு பெருமை குறையும். இத்தகைய திறமை வாய்ந்த நீ இந்த குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல் என்னுடன் வந்தால் உன் பெருமை இந்த உலகத்திற்கே தெரியும்,” என்றது.

காற்றின் பேச்சைக் கேட்ட பூவானது, கர்வம் கொண்டது. காற்றுடன் சென்றால் தனது அழகும், பெருமையும் உலகம் முழுக்கத் தெரியும் என்றும், மரத்தைவிட உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்றும் கருதி மரத்திலிருந்து பிரிந்து காற்றுடன் சென்றது. ஆனால் காற்றால் எல்லா நேரமும் ஒரே சீராக வீச முடியாது. காற்றின் வேகம் குறைந்த நேரத்தில், அந்த பூவானது கிழே விழுந்தது. கீழே விழுந்த பூவானது சிறிது நேரத்தில் வெயிலில் காய்ந்து, சருகாகி குப்பை மேட்டிற்கு சென்று விட்டது. மரத்தை விட்டு பூ செல்வதனால் மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஒரு பூ சென்றால், இன்னொரு பூ துளிர்விடும். இது மாதிரி எவ்வளவு பூக்கள் மரத்திலிருந்து விழுந்தாலும், புதிய பூக்கள் துளிர்விட்டுக் கொண்டே இருக்கும். மரத்தில் இருக்கும் வரைக்கும் தான் பூவிற்கு மதிப்பு. மரத்தை விட்டு கீழே விழுந்துவிட்டால் அது குப்பைமேட்டிற்குத்தான் செல்லும்.

அதுபோல் யார் எங்கு சென்றாலும், மரத்தைப் போல் இந்த இயக்கம் துளிர் விட்டுக் கொண்டே இருக்கும். இயக்கத்திற்கு துரோகம் செய்து சென்றவர்களுக்கு கீழே விழுந்த பூவின் கதிதான் ஏற்படும்.

தர்மபுரி மாவட்டத்திலே இருவர் பாதை மாறி சென்றுவிட்டார்கள். அவர்கள் போனால் என்ன, தர்மபுரி மாவட்டத்திலுள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், நாங்கள் அம்மாவின் அரசுக்கு அரணாக இருக்கின்றோம் என்று குழுமி அரங்கம் நிரம்பி வழிகின்ற காட்சியே இதற்கு சாட்சி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Next Story