மோட்டார் சைக்கிள்–ஆட்டோ மோதல்: மகன் கண் எதிரே தொழில் அதிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மகன் கண் எதிரே தொழில் அதிபர் பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் பாலாஜி கார்டன் 2–வது பிரதான சாலையை சேர்ந்தவர் விஜயராம்(வயது 48). தொழில் அதிபர். இவருடைய மகன் பீமாராம்(17). இவர், கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை விஜயராம், தனது மகனை செங்குன்றம் பஸ் நிலையத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார். வடபெரும்பாக்கம்–புழல் செல்லும் காந்தி சாலையில் செங்குன்றம் நோக்கி வந்த போது, பின்னால் வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜயராம், அதே இடத்தில் மகன் கண்எதிரேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் பீமாராம், காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் பலியான விஜயராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவரான புழல் திருநீலகண்டன் நகரைச் சேர்ந்த ரவிக்குமார்(28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் கடந்த 1–ந்தேதி நீர் இருப்பு 135 மில்லியன் கன அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று 299 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரியில் கடந்த வாரம் 30 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு தொடர் மழை காரணமாக 60 மில்லியன் கனஅடியாக உயர்ந்தது.
* மாநகராட்சி ஆலந்தூர் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் பழவந்தாங்கல் நேரு காலனி பகுதியில் நடத்திய சோதனையில் புதிதாக கட்டப்படும் ஒரு கட்டிடத்தில் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் புழுக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கட்டிட உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
* பெரம்பூர் பகுதியில் ஏற்பட்ட மின் தடையை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் பெரம்பூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோன்று ஓட்டேரி ப்ரிக்ளின் சாலையில் மின் தடையை கண்டித்து நேற்று இரவு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
* மதுரவாயல் பகுதியை சேர்ந்த நாகேஷ்வரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 19 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இவரது வீட்டின் அருகே உள்ள முரளிதரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
* சைதாப்பேட்டையில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற மாநகர பஸ் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணி அளவில் கண்ணம்மாபேட்டை அருகே சென்றபோது குடிபோதையில் வாகனம் ஒட்டியவர் பஸ் மீது கல்வீசினார்.
* பட்டினப்பாக்கம் ஆற்றில் மிதந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை போலீசார் மீட்டு அவர் யார்? என விசாரித்து வருகிறார்கள்.
* திருவேற்காட்டை சேர்ந்த பாபு என்பவரது மனைவி அமுலுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை இறந்தது. முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
* திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின்பேரில் செங்குன்றத்தில் அதிகாரிகள் நேற்று டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* தூத்துக்குடியை சேர்ந்த மாரிமுத்து (40) தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு புழலில் உள்ள தனது தம்பி வீட்டில் வசித்து வந்த அவர் புழல் சுடுகாட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
* மதுரவாயல் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(27) நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நசரத்பேட்டை அருகே சென்றபோது தனியார் பஸ் மோதியதில் இறந்தார்.
* சென்னையை அடுத்த உத்தண்டியில் சாலையோர மரத்தில் எர்ணாவூரை சேர்ந்த கார் டிரைவர் கமலநாதன்(40) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.