கள்ளிப்பாடி குவாரியில் முறைகேடாக மணல் அள்ளப்படுகிறதா? கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
கள்ளிப்பாடி குவாரியில் முறைகேடாக மணல் அள்ளப்படுகிறதா? என்று கோட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மதகளிர்மாணிக்கம், கூடலையாத்தூர், கள்ளிப்பாடி ஆகிய இடங்களில் அரசு மணல் குவாரியை திறந்தது. அதில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகள், டிராக்டர்கள் மூலம் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மதகளிர்மாணிக்கத்தில் உள்ள மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மதகளிர்மாணிக்கத்தில் உள்ள மணல் குவாரி மூடப்பட்டது. மற்ற 2 இடங்களிலும் உரிய அனுமதி சீட்டு பெற்று வரும் வாகனங்களில் மணல் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கள்ளிப்பாடியில் உள்ள மணல் குவாரியில் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்களுக்கு அதற்காக குறிப்பிட்ட தொகையை பெற்று மணல் வழங்கப்படுவதாகவும், குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் கள்ளிப்பாடி மணல் குவாரிக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனுமதி சீட்டு பெற்றுள்ள லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கு மட்டும் மணல் வழங்கப்படுகிறதா? வாகனங்களில் குறிப்பிட்ட அளவு மணல் ஏற்றப்பட்டிருக்கிறதா? வெள்ளாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் மணல் அள்ளப்படுகிறதா? என்று சோதனை செய்தார்.
அப்போது உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை, கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார். விசாரணையில், அந்த டிராக்டர் போலீஸ்காரர் ஒருவர், தனது உறவினர் ஒருவரின் டிராக்டர் மூலம் மணல் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் குவாரியில் இருந்த அதிகாரிகளிடமும் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது உரிய அனுமதி சீட்டு இல்லாத வாகனங்களுக்கு முறைகேடாக மணல் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.