ஓபசமுத்திரம், வீரமங்கலம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


ஓபசமுத்திரம், வீரமங்கலம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 8 Oct 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஓபசமுத்திரம், வீரமங்கலம், நெல்வாய், போந்தவாக்கம், மப்பேடு ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கனகவள்ளி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாகலட்சுமி ஸ்ரீதர், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் காளத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 36 மனுக்களும், நலிந்தோர் உதவித்தொகை கோரி ஒரு மனுவும், இதர மனு ஒன்றும் சேர்த்து மொத்தம் 38 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 26 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அதற்கான நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை தாசில்தார் ராஜகோபால் வழங்கினார். மற்ற மனுக்கள் மீது பரீசிலனைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் கவுரீஸ்வரி வரவேற்றார். முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.

பள்ளிப்பட்டு தாலுகா வீரமங்கலம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி, தனி தாசில்தார் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 46 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 16 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 30 மனுக்கள் விசாரணைக்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முகாமில் பள்ளிப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜன், முதுநிலை அலுவலர் அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு துயர் துடைப்பு தாசில்தார் லதா தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, வட்ட வழங்கல் அலுவலர் பிரீத்தி, மண்டல் துணை தாசில்தார் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் கிருபாஉஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை கேட்டு மொத்தம் 56 பேர் தாசில்தார் கிருபாஉஷாவிடம் மனுக்கள் கொடுத்தனர். இதில் 5 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள 50 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வருவாய் அலுவலர்கள் ரவி, ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ள போந்தவாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி தனிதாசில்தார் புகழேந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். டாக்டர் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் புஷ்பா, கிராம நிர்வாக அலுவலர்கள் டேவிட்ராஜ், அக்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுகளை பொதுமக்கள் தனிதாசில்தாரிடம் வழங்கினர். இதில், 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 5 மனுக்களுக்கு அதற்கான ஆணையை பொன்னேரி தனிதாசில்தார் புகழேந்தி வழங்கி பேசினார்.
அதன் பின்னர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஊராட்சி உதவியாளர் ஹிரிநாதன் வரவேற்றார். முடிவில், ஊராட்சி உதவியாளர் காளாஸ்திரி நன்றி கூறினார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் , சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுகன்யா, வட்டவழங்கல் அலுவலர் உமா, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் பட்டா மாற்றம் , முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை என 165 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களில் 52 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அங்கேயே பயனாளிகளுக்கு சான்றிதழ்களை ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ வழங்கினார். மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் மகாதேவன், இளங்கோவன், தயாநிதி, ஹேமாவதி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story