புதுவை அரசை 6 மாதத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற்று புதுவை அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புதுச்சேரி மக்கள் டெங்கு காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி ஆகிய துறைகள் டெங்கு காய்ச்சலை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுவை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. ஒரே படுக்கையில் 4, 5 நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு நிதி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டும் அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற முதல்–அமைச்சரும், கவர்னரும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மோசமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் மற்றும் கவர்னரின் அதிகார போட்டியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது புதுச்சேரிக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. முதல்–அமைச்சர், கவர்னருக்கு இடையேயான மோதல் காரணமாக அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் தங்களை புதுவையில் இருந்து விடுவிக்குமாறு தலைமை செயலாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையெல்லாம் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியல்ல. புதுச்சேரியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். கவர்னரை திரும்பப்பெற்று புதுச்சேரி அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும்.
அமைச்சர் கந்தசாமி மீதான புகார் தன்னிடம் இருப்பதாகவும், அது தொடர்பாக பேச மொழி பெயர்ப்பாளராக அவரது மகனை அழைத்துக்கொண்டு தன்னை சந்திக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரை மிரட்டும் தோணியில் கவர்னர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
ஆண்டுதோறும் தீபாவளியின்போது 2 கிலோ இலவச சர்க்கரையை அரசு அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அரசு அறிவிக்கவில்லை. எந்தப்பொருள் வாங்கினாலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக கவர்னர் குற்றம் கண்டுபிடித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அமைச்சர்கள் உள்ளதுதான் இதற்கு காரணம். முதல்–அமைச்சர் உடனடியாக தீபாவளிக்கான இலவச பொருளை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.