மாநிலங்களில் கவர்னர் நியமன முறையை ஒழிக்க வேண்டும் திருமுருகன் காந்தி பேட்டி
மாநிலங்களில் கவர்னர் நியமன முறையை ஒழிக்க வேண்டுமென மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சுதேசி மில் அருகே நேற்று மாலை மே 17 இயக்கம் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:–
மே 17 இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. புதுவையிலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். போலீசார் முதலில் அனுமதி மறுத்தனர். அதற்கு கவர்னர் கிரண்பெடி தான் காரணம். பல்வேறு தடைகளை மீறி போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் எங்கள் மீது போடப்படும் பொய் வழக்குக்களை கண்டு பயப்படப்போவதில்லை. மக்கள் துணையோடு தமிழின விரோத பா.ஜ.க. அரசை வீழ்த்துவோம். புதுவையில் ஜனநாயக விரோதத்திற்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். மாநிலங்களில் கவர்னர் நியமன முறையை ஒழிக்க வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் வளரும். முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தனசெல்வத்திடம், மாநில பா.ஜ.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், மாவட்ட தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சுதேசி மில் அருகே நடைபெறும் மே 17 இயக்கத்தின் பொதுக்கூட்டத்திற்கு தடை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அப்போது அவர்களிடம், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் உரிய அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.