உருகவைக்கும் உண்மைக் காதல்


உருகவைக்கும் உண்மைக் காதல்
x
தினத்தந்தி 8 Oct 2017 1:00 PM IST (Updated: 8 Oct 2017 1:00 PM IST)
t-max-icont-min-icon

முக அழகை பார்த்து வருவது காதல் அல்ல. உள்ளத்தில் வெளிப்படும் அன்பின் பரிமாற்றமே உண்மையான காதலாக இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது.

முக அழகை பார்த்து வருவது காதல் அல்ல. உள்ளத்தில் வெளிப்படும் அன்பின் பரிமாற்றமே உண்மையான காதலாக இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது, ஒரு காதல் ஜோடி. பெங்களூருவை சேர்ந்த அந்த ஜோடியின் பெயர் ஜெயபிரகாஷ்-சுனிதா. விபத்தில் சிக்கி அடையாளம் காணமுடியாத அளவுக்கு முகம் சிதைந்து போன நிலையில் இருந்த சுனிதாவை, கரம் பிடித்து உண்மை காதலுக்கு இலக்கணமாக திகழ்கிறார் ஜெயபிரகாஷ். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். படிக்கும்போது ஜெயபிரகாஷுக்கு சுனிதா மீது காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் அதனை வெளிப்படுத்தாமல் நட்புடன் பழகி வந்திருக்கிறார்.

“அப்போது எனக்கு 17 வயது. நான் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது ஒரு பெண் எனது வகுப்பை கடந்து சென்றாள். அவளைப்போன்ற பெண்ணை இதுவரை நான் பார்த்ததில்லை. முதல் சந்திப்பிலேயே என்னை அவள் கவர்ந்து விட்டாள். காலப்போக்கில் நாங்கள் நண்பர்களாகி விட்டோம். ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும்போதெல்லாம் என் இதயம் படபடத்தது. அதனால் அவளிடம் பேசுவதை குறைத்துக்கொண்டேன். பரீட்சைக்கு பிறகு, அவள் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினாள். ஆனால் அது நடக்கவில்லை. நான் கல்லூரியில் சேர்ந்தேன். அதன்பிறகு அவளை சந்திக்க முடியவில்லை. 2007-ம் ஆண்டு என் பிறந்தநாளின்போது போனில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் தன்னை சுனிதா என்று அவள் அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் குரலை கேட்டதும் என் இதய துடிப்பு அதிகமானது. இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்துவிட்டாள். அதன்பிறகு நாங்கள் எப்போதாவது தொடர்பில் இருந்தோம். எங்கள் வாழ்க்கையில் பிசியாகிவிட்டோம்” என்கிறார்.

சுனிதா, 2011-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து கோவைக்கு சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார். அவருடைய முகத்தில் பலத்த அடிபட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு 27 ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருக்கிறது. காதலியின் நிலையை அறிந்து துடிதுடித்துபோன ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரிக்கு ஓடோடி சென்று, சுனிதாஅருகில் இருந்து கவனித்திருக்கிறார்.

“சுனிதா விபத்துக்குள்ளானதை நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். அவளை நேரில் சென்று பார்த்தபோது நிலைகுலைந்துபோனேன். 90 வயது முதியவர் தோற்றத்தில் காணப்பட்டாள். தலையில் முடி எதுவும் இல்லை. மூக்கு, வாய், பல் எதுவும் தெரியவில்லை. அதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அந்த கணத்தில் அவளை காதலிக்கிறேன் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தேன். அவளிடம், ‘உன்னை நன்றாக கவனித்துக்கொள்ள கூடிய ஒரே நபர் நான்தான். உன்னை நான் காதலிக்கிறேன். திருமணமும் செய்து கொள்வேன்’ என்று கூறினேன். அவள் பதில் எதுவும் பேசவில்லை. ஆரம்பத்தில் என் முடிவை கண்டு என் அம்மா அதிர்ச்சி அடைந்தார். எதிர்ப்பும் தெரிவித்தார். அதே சமயத்தில் அப்பா எனக்கு ஆதரவாக இருந்தார்” என்கிறார்.

சுனிதா, தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு உடல்நலம் தேறிய பிறகு பெங்களூரு சென்றிருக்கிறார்.

“எனது அறையில் கண்ணாடி அகற்றப்பட்டிருந்தது. நீண்ட நாட்கள் என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவே இல்லை. முதன்முதலாக கண்ணாடி கதவில் முகம் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்” என்கிறார், சுனிதா.

ஜெயப்பிரகாசுக்கு சுனிதா மீதான காதல் துளியும் குறையவில்லை. பெற்றோர் சம்மதத்துடன் 2014-ம் ஆண்டு சுனிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் இந்த தம்பதியினர் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Next Story