வேலூர் பாலாற்றில் வெள்ளத்தை கலெக்டர் மலர் தூவி வரவேற்பு


வேலூர் பாலாற்றில் வெள்ளத்தை கலெக்டர் மலர் தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பாலாற்று வெள்ளத்தை கலெக்டர் ராமன் மலர் தூவி வரவேற்றார்.

வேலூர்,

வேலூர் பாலாற்று வெள்ளத்தை கலெக்டர் ராமன் மலர் தூவி வரவேற்றார். வெள்ளம் ஓடுவதை ஏராளமான பொதுமக்களும் பாலத்தில் நின்று ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் மழை பெய்துள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தாண்டி தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா வழியாக நேற்று முன்தினம் மாலை வேலூரை வந்தடைந்தது.

இரவு 10 மணிக்கு புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்று பாலத்தை வந்தடைந்தது. இரவிலும் பொதுமக்கள் ‘டார்ச் லைட்’ அடித்து பாலாற்று வெள்ளத்தை கண்டுகளித்தனர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாற்றில் தண்ணீர் வந்ததை நேற்று காலையிலும் பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக நின்று பாலாற்று பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேலூர் உதவி கலெக்டர் செல்வராஜி உள்பட அதிகாரிகள் பலர் பாலாற்றில் மலர் தூவி வரவேற்றனர்.

தண்ணீர் வராத நாட்களில் பலர் பாலாற்று பாலத்தின்கீழ் மோட்டார்சைக்கிளில் வேலூரில் இருந்து விருதம்பட்டுக்கு செல்வார்கள். மேலும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் பாலாற்றில் மேய்ச்சலுக்கு செல்லும். தற்போது வெள்ளம் வந்துள்ளதால் இந்த பாதை துண்டிக்கப்பட்டது. பாலாற்றை கடந்த மாடுகள் வெள்ளத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் புதரில் சிக்கி மாடுகள் பின்னர் கரையேறி மேலே வந்தது.

பாலாற்றில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story