இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்
வேலூரில் நடைபெறும் விமானப்படைக்கான ஆட்கள் தேர்வு முகாமில் இடைத்தரகர்களை நம்பி இளைஞர்கள் ஏமாறவேண்டாம் என்று கலெக்டர் ராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலூர்,
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
இந்திய விமான படைக்கான ஆட்கள் தேர்வு முகாம் இன்றும் (திங்கட்கிழமை), 12–ந் தேதியும் 2 நாட்கள் வேலூர் ஊரீசு கல்லூரியில் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக எழுத்து தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வு அப்ஜெக்டிவ் வகையில் இருக்கும். ஆங்கில பாடத்தில் 20 கேள்விகள், கணிதத்தில் 25 கேள்விகள், அறிவியலில் 25 கேள்விகள் என மொத்தம் 70 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தேர்வு நேரம் ஒருமணி நேரமாகும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உடல்தகுதி தேர்வில் கலந்துகொள்வார்கள். தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 6 மணி முதல் 10 மணிக்குள் வந்துவிடவேண்டும். அவர்களுக்காக பஸ்நிலையத்தில் இருந்து ஊரீசு கல்லூரி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு, தங்கும் வசதி ஆகியவை சலுகை கட்டணத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் விமானப்படையை பொறுத்தவரையில் தமிழகத்தின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. விமானப்படையிலும் அதிக அளவில் சேரவேண்டும்.விமானப்படைக்கான தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும். எனவே இளைஞர்கள் யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் செங்கேட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் பாலாஜி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் சைலேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story