ராட்சத தண்ணீர் தொட்டியில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலி
குடியாத்தம் மோர்தானா அணையின் ராட்சத தண்ணீர் தொட்டியில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலியானார்.
குடியாத்தம்,
குடியாத்தம் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனையடுத்து அணையில் தண்ணீரை பார்ப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மோர்தானா அணைக்கு சென்றனர்.
மோர்தானா அணையின் கீழே ராட்சத தண்ணீர் தொட்டி உள்ளது. அணையில் இருந்து வழிந்து செல்லும் தண்ணீர் இந்த தொட்டியில் விழுந்து பின்னர் ஆற்றில் செல்லும். தற்போது ராட்சத தொட்டியில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை செல்வ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் பார்த்திபன் (வயது 23). பி.எஸ்சி. படித்துள்ளார். பார்த்திபன் நேற்று தனது நண்பர்களுடன் மோர்தானா அணைக்கு சென்றுள்ளார். அணை பகுதியின் கீழே உள்ள ராட்சத தண்ணீர் தொட்டியில் பார்த்திபன் இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ராட்சத தொட்டியில் இறங்கி பார்த்திபனை தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பிறகு பார்த்திபனை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.