ஈரோடு ரெயில் நிலையத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தாமதம்


ஈரோடு ரெயில் நிலையத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தாமதம்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன. இந்த நடைமேடைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் நுழைவு வாயிலில் இருந்து படிக்கட்டு வழியாக ஏற வேண்டும்.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் படிக்கட்டில் ஏறி செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே முதலாம் மற்றும் 2-வது நடைமேடைக்கும், 3-வது மற்றும் 4-வது நடைமேடைக்கும் பொதுவாக 2 லிப்ட்கள் (பளுதூக்கி) அமைக்கப்பட்டன.

ஆனால் காலபோக்கில் லிப்ட் கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் தங்களது உடைமைகளை படிக்கட்டு வழியாக சிரமப்பட்டு தூக்கி கொண்டு செல்கிறார்கள்.

எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஜி.எஸ்.டி. விதிப்பு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எக்சலேட்டர்) அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் மெதுவாக நடந்து வந்தது. இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது கட்டுமான பணிகள் பாதி நிறைவடைந்த நிலையில் திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நகரும் படிக்கட்டுகள், லிப்ட் அமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

ரெயில்வே நிர்வாகத்தில் கட்டுமான பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. 12 சதவீதம் விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகரும் படிக்கட்டு அமைக்க ஏலம் விடப்படும்போது ஜி.எஸ்.டி. கிடையாது. தற்போது ஜி.எஸ்.டி. புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளதால் கூடுதல் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரியை சேர்த்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாடு காரணமாகவும் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story