ஈரோடு கடைவீதியில் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர் கடும் போக்குவரத்து நெரிசல்


ஈரோடு கடைவீதியில் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:00 AM IST (Updated: 9 Oct 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கடைவீதியில் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோடு,

தீபாவளி பண்டிகை வருகிற 18-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்று பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் புதிய ஆடைகளை வாங்கி வருகிறார்கள். இதற்காக ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானவர்கள் ஜவுளிகளை வாங்க கடைவீதியில் குவிந்தனர். இதனால் ஜவுளிக்கடைகள் அதிகமாக உள்ள மணிக்கூண்டு, ஈஸ்வரன்கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப்ரோடு ஆகிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

போக்குவரத்து நெரிசல்

பொதுமக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தாலும், ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக வழக்கம்போல் பஸ், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் சென்றன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. மேலும் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே பெரும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக ஆர்.கே.வி.ரோட்டில் நேற்று பகலில் பொதுமக்கள் நடக்கக்கூட இடம் கிடைக்காமல் திணறினார்கள். இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மேட்டூர் ரோட்டிலும் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அங்கும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story