தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் ஜவுளி வாங்குவதற்காக தஞ்சை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தஞ்சாவூர்,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி பண்டிகை. இந்த பண்டிகை தீபங்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடையும், பலகாரங்களும் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இதனால் தஞ்சை கடைவீதிகளில் மக்கள் கூட்டமாகவே காட்சி அளிக்கிறது. ஜவுளிக்கடைகள் அதிகம் நிறைந்துள்ள தஞ்சை காந்திஜி சாலை மற்றும் அண்ணா சிலை பகுதி, பனகல் கட்டிடம் செல்லும் சாலைகளில் ஜவுளிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அலைமோதிய மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம் அலைமோதியதால் சாலைகளில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளிக்கான புத்தாடைகளை வாங்கி சென்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்களுக்கு முன்னதாக கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படும்.

தரைக்கடைகள்

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆபிரகாம் பண்டிதர்சாலை, காந்திஜிசாலை, பனகல் கட்டிடம் சாலை, தெற்கு வீதி, கீழராஜவீதிகளில் தரைக்கடைகளும் போடப்படும். தற்போதே வியாபாரிகள் இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் தஞ்சை மாநகரில் ஏராளமான பட்டாசு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

Related Tags :
Next Story