பனைமரத்தில் மோதி விபத்து: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மாணவர்கள் பரிதாப சாவு


பனைமரத்தில் மோதி விபத்து: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மாணவர்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:45 AM IST (Updated: 9 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

கருப்பூர்,

சேலம் கருப்பூர் அருகே உள்ள சின்ன வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார், மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய உறவினரான சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னுசாமி மகன் விக்னேஷ் (19). கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் இன்னொரு விக்னேஷ் (19).

இவர்கள் 2 பேரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தனர். மேலும் இவர்கள் கல்லூரிக்கு தினமும் அந்த கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று கல்லூரியில் சிறப்பு லேப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதனால் விக்னேசும், இன்னொரு விக்னேசும் கல்லூரி பஸ்சில் செல்வதற்காக வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ்நிறுத்தத்திற்கு ஸ்ரீதருடன் மோட்டார் சைக்கிளில் சென்றனர். இவர்கள் செல்வதற்குள் கல்லூரி பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பஸ்சை பிடிப்பதற்காக 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது வழியில் இவர்களுடைய நண்பரான நாலுகால் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (20) என்பவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டனர். ரஞ்சித்குமார் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மோட்டார் சைக்கிளை சின்னுசாமி மகன் விக்னேஷ் ஓட்டினார்.

மேலும் அவர்கள், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள் ரோட்டோரத்தில் இருந்த பனைமரத்தில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ், ஸ்ரீதர், மற்றொரு விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் சூரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரஞ்சித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Related Tags :
Next Story