வெள்ளகோவில் அருகே கோர விபத்து: துறையூரைச் சேர்ந்த கணவன்-மனைவி-மகன் பலி


வெள்ளகோவில் அருகே கோர விபத்து: துறையூரைச் சேர்ந்த கணவன்-மனைவி-மகன் பலி
x
தினத்தந்தி 9 Oct 2017 4:45 AM IST (Updated: 9 Oct 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே அரசுபஸ்-வேன் மோதிக்கொண்ட கோர விபத்தில் துறையூரைச் சேர்ந்த கணவன்-மனைவி-மகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துக்கம் விசாரிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

வெள்ளகோவில்,

திருச்சி மாவட்டம் துறையூர் குட்டக்கரையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). இவர் துறையூர் பஸ் நிலையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருடைய மனைவி மரகதம் (45). இவர்களுடைய மகன்கள் சக்திவேல் (14) மற்றும் அபிலேஷ் (11).

இதில் சக்திவேல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறான். அபிலேஷ் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் திருப்பூரில் மரகதத்தின் உறவினர் இறந்ததால் துக்கம் விசாரிக்க குடும்பத்துடன் செல்ல சண்முகம் முடிவு செய்தார். அதன்படி சண்முகம் தனக்கு சொந்தமான வேனில் குட்டக்கரையில் இருந்து திருப்பூருக்கு நேற்று காலை புறப்பட்டார். வேனை சண்முகம் ஓட்டினார். முன் இருக்கையில் அவருடைய இளைய மகன் அபிலேஷ் அமர்ந்து இருந்தான். வேனின் பின் இருக்கையில் மரகதம் அமர்ந்து இருந்தார்.

அந்த வேன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து கரூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு வேன் உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் வேனில் இருந்த சண்முகம், மரகதம் மற்றும் அபிலேஷ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த கோர விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமூர்த்தி, அன்புராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் வேனுக்குள் சிக்கிய 3 பேரின் உடல்களை கம்பி மூலம் நெம்பி மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து அரசு பஸ் டிரைவர் கலைவாணன் வெள்ளகோவில் போலீசில் சரண் அடைந்தார். இந்த விபத்துகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துக்கம் விசாரிக்க சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story