“நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவோம்” பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் விஷால் பேச்சு


“நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவோம்” பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் விஷால் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2017 5:00 AM IST (Updated: 9 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

“நடிகர் சங்க கட்டிட பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்”, என்று சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் விஷால் பேசினார்.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் சூர்யா, ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், சரவணன், பசுபதி, கஞ்சா கருப்பு, ஸ்ரீமன், உதயா, லதா, சச்சு, வாணிஸ்ரீ, வைஜெயந்தி மாலா, காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா, ரமா பிரபா, ராஜஸ்ரீ, சத்யபிரியா, கோவை சரளா, குட்டி பத்மினி, சங்கீதா, சோனியா உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடிகர் விஷால் பேசியதாவது:-

நடிகர் சங்க கட்டிடம் அடுத்த ஆண்டு (2018) டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். அந்த கட்டிடத்தை கட்டிய பிறகு தான் எனது திருமணம் நடக்கும். எங்கள் நிர்வாகத்தில் சிறப்பாக பணிகள் நடக்கின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் ஆவிகள் கட்டிட நிலத்தில் புகுந்து எங்களுக்கு உதவுகிறது. மீண்டும் மீண்டும் வழக்கு போட்டு போரடிக்க செய்யாதீர்கள்.

நாங்கள் நேர்மையுடன் இருக்கிறோம். நேர்மை மட்டுமே ஜெயிக்கும். முந்தைய நிர்வாகத்தின் பொதுக்குழுவில் நடிகர் சங்க நிலம் பற்றி கேள்வி எழுப்பினேன். என்னை அப்போது பேசவே விடவில்லை. இப்போது நானே பொதுச்செயலாளராக இங்கு நிற்கிறேன். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முக்கிய நோக்கம். எனவே கட்டுமான பணிகளை பாதியில் விட்டுவிட்டு போக விரும்பவில்லை. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிப்பதற்காக, நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

திரைப்படங்களுக்கு தமிழக அரசு 10 சதவீதம் கேளிக்கை வரி விதித்து உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் கேளிக்கை வரி இல்லை. கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான், தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். ஜி.எஸ்.டி. வரியும் செலுத்த வேண்டியுள்ளது. திருட்டு வி.சி.டி. பிரச்சினையும் இருக்கிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் சினிமா உலகம் செயல்பட முடியாது.

இவ்வாறு விஷால் பேசினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “பழைய நிர்வாகத்தில் கணக்கு வழக்கு இல்லாமல் பணம் எடுக்கப்பட்டு உள்ளது. வருமான வரி கணக்குகளும் முறையாக தாக்கல் செய்யவில்லை. அதையெல்லாம் நாங்கள் சரிபடுத்தி உள்ளோம். கட்டிட நிதி திரட்டுவதற்கு மீண்டும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அனுமதி அளித்துள்ளனர்”, என்றார்.

கூட்டம் முடிந்ததும் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி திரட்ட ஜனவரி மாதம் 6-ந்தேதி மலேசியாவில் நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறோம். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யவேண்டும். இதற்காக அரசு பிரதிநிதிகளுடன் 10-ந்தேதி (நாளை) பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இதில் சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* சிவாஜிகணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையில் இருந்து கருணாநிதி பெயர் நீக்கப்பட்டு உள்ளது. அவர் நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக இருக்கிறார். எனவே சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரை சேர்க்கவேண்டும்.

* சினிமா டிக்கெட் கட்டண கேளிக்கை வரி பிரச்சினையில் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படுகிறது.

* நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை விற்றது தொடர்பாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Related Tags :
Next Story