மேலப்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை கலெக்டர் பார்வையிட்டார்


மேலப்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 9 Oct 2017 5:40 AM IST (Updated: 9 Oct 2017 5:40 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

நெல்லை,

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கடந்த 3–ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் 12,38,651 ஆண் வாக்காளர்கள், 12,77,579 பெண் வாக்காளர்கள், 79 இதர வாக்காளர்கள் என மொத்தம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 309 வாக்காளர்கள் உள்ளனர். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் இணையதளமான elections.tn.gov.in என்ற முகவரியில் பார்வையிடலாம்.

தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இந்த மாதம் (அக்டோபர்) முழுவதும் மனுக்கள் பெறப்படுகிறது. 1.1.2018 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 31.12.1999 வரை பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளராக பதிவு செய்ய படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பெயர் மற்றும் இதர திருத்த மாற்றம் செய்ய படிவம் 8–ஏ மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 10–ல் விண்ணப்பிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 1,368 இடங்களில் அமைந்துள்ள 2,931 வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 31–ந்தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது.

இதுதவிர நேற்று வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய வாக்காளராக சேருவதற்கும், வாக்காளர் விவரங்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பங்களை பெற்று, உடனடியாக பூர்த்தி செய்து அளித்தனர். இந்த பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் அவர் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘‘புதிதாக பெயர் சேர்க்க கோரும் விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது குறித்த சான்று, ரே‌ஷன் கார்டு, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குப் புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் கியாஸ் இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். வயது சான்றாக பிறப்பு சான்றிதழ்களிள் நகல் அல்லது பள்ளிக்கூட சான்றிதழின் நகல் அளிக்கப்படலாம். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். மற்றவர்கள் அவர்களுடைய பழைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும். வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Next Story