கிருஷ்ணராயபுரம் வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்


கிருஷ்ணராயபுரம் வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்
x
தினத்தந்தி 9 Oct 2017 11:30 AM IST (Updated: 9 Oct 2017 9:50 AM IST)
t-max-icont-min-icon

மாயனூர் காவிரியில் இருந்து புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் (கே.எஸ்.எல்.சி.) பிரிந்து செல்கிறது.

கிருஷ்ணராயபுரம்,

இந்த வாய்க்காலின் முதல் மதகிலிருந்து கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் பிரிந்து மேட்டு திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, பொய்கைபுத்தூர் வரை சென்று சிந்தலவாடி பிளாற்றில் கலந்து விடுகிறது. சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த வாய்க்கால் தூர்வாரி சுமார் 10 ஆண்டுகள் ஆவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வாய்க்காலை நம்பி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, வெற்றிலை கொடிக்கால் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலை தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டு பாதிதூரத்திற்கு தான் தண்ணீர் சென்றது. புதர்மண்டி கிடப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் தேங்கி விடுகிறது. இதனால் வாய்க்காலை நம்பி சாகுபடி செய்யப்படும் பயிர்கள் எல்லாம் தண்ணீர் கிடைக்காமல் காயும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது.

தற்போது சம்பா பாசனத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். இதற்காக தற்போது சம்பா, குறுவை சாகுபடிக்கு வயல்கள் தயார்படுத்தப்பட்டு, நாற்று விட்டு வைத்துள்ளனர் விவசாயிகள். இதனால் இனி அதிகாரிகளை நம்பி பயன்இல்லை என 500 ஏக்கர் பாசனம் பெறும் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி சுமார் ரூ.1 லட்சம் செலவில் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணராயபுரம் வட்டார விவசாயிகள் சங்க தலைவர் பொய்கைபுத்தூர் கிருஷ்ணன் கூறியதாவது:-

புதிய கட்டளை மேட்டுவாய்க்காலின் முதல் மதகிலிருந்து பிரியும் கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்கால் தூர்வாராததால் புதர் மண்டிபோய் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. இதனால் வாய்க்கால் பாசனத்தை நம்பி உள்ள பல விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. கடந்த முறை தண்ணீர் திறந்து விட்டு பாதி வாய்க்காலுக்கு கூட தண்ணீர் வந்து சேரவில்லை. தற்போது சம்பா, குறுவை சாகுபடிக்கு நாற்று விட்டு தயார் நிலையில் உள்ளோம். வாய்க்காலை தூர்வாரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story