கலெக்டர்-அதிகாரிகளுக்கு நினைவு பரிசு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


கலெக்டர்-அதிகாரிகளுக்கு நினைவு பரிசு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Oct 2017 12:00 PM IST (Updated: 9 Oct 2017 9:54 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கண்காட்சி நிறைவு பெற்றது. கலெக்டர்- அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நினைவு பரிசு வழங்கினார்.

கரூர்,

கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த 4-ந் தேதி திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் எடப்பாடி பழனிசாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து பேசினார்.
விழாவையொட்டி மைதானத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சி மற்றும் அரசு துறைகளின் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை பொதுமக்கள் தொடர்ந்து பார்வையிட வசதியாக நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.

புகைப்பட கண்காட்சி மற்றும் அரங்குகளை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கண்காட்சி அரங்குகள் நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று மாலை நிறைவு விழா நடந்தது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரெயில் தண்டவாளத்தை போல அதிகாரிகளும், கட்சியினரும் இணைந்து செயல்பட்டதால் தான். ஒரு ரெயிலுக்கு 2 என்ஜின் டிரைவர்கள் இருப்பதை போல நானும், கலெக்டரும் இருந்து செயல்பட்டோம். ஒவ்வொரு விஷயத்தை மிகவும் கவனமாக பார்த்து செய்தோம். விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாநில மாநாடு போல மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் போது மழை வந்து குறுக்கீடு செய்துவிடுமோ? என எனக்கு பயமாக இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் ஆன்மாவால் விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. ஜெயலலிதா நினைத்ததை விட எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எழுச்சியோடு வெகு சிறப்பாக நடத்தி கொண்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆன்மா சக்தி வழி நடத்தி கொண்டு செல்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கலெக்டர் கோவிந்தராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் மற்றும் கண்காட்சி அரங்குகள் அமைந்திருந்த துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் நினைவு பரிசுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

விழாவில் கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில், அமைச்சருக்கும், அனைத்து ஊழியர்களுக்கும், அ.தி.மு.க. அம்மா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, அ.தி.மு.க. அம்மா கட்சி அவை தலைவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story