மின்சாரம் தாக்கியதில் மேலும் ஒரு தொழிலாளி சாவு வீட்டின் மேல் இருந்த விளம்பர பேனரை கழற்றியபோது பரிதாபம்


மின்சாரம் தாக்கியதில் மேலும் ஒரு தொழிலாளி சாவு வீட்டின் மேல் இருந்த விளம்பர பேனரை கழற்றியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 9 Oct 2017 2:00 PM IST (Updated: 9 Oct 2017 10:07 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே வீட்டின் மேல் இருந்த விளம்பர பேனரை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 36). அதே ஊரை சேர்ந்தவர் முருகன் (38). கூலி தொழிலாளிகள். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் குண்டல்பட்டிமேடு பகுதியில் ராமச்சந்திரன் வீட்டின்மேல் பகுதியில் பெரிய அளவிலான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த கணேசனும், அவரது உறவினர் முருகனும் அந்த பேனரை கழற்றி வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என முடிவு செய்தனர்.

இதற்காக இருவரும் ராமச்சந்திரன் வீட்டின் மாடிக்கு சென்று அந்த விளம்பர பேனரை நேற்று முன்தினம் கழற்றினர். அப்போது அதில் இருந்த ஒவ்வொரு கட்டுகளையும் அவிழ்த்த போது அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி கீழே வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த முருகனை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மேல் சிகிச்சைக்காக முருகன் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story