“தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு


“தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2017 3:00 PM IST (Updated: 9 Oct 2017 12:20 PM IST)
t-max-icont-min-icon

“எதிர்க்கட்சியினர் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதா? இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது“ என பள்ளிபாளையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நபார்டு, கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம்-ஈரோடு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தினை திறந்து வைத்தும், வருவாய்த்துறையின் சார்பில் 317 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை செயலாற்றி வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொன்னால் அது உண்மையாகாது. அதை மக்கள் உண்மை என எண்ணுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. நாங்களே திட்டங்களை அறிவித்து, அவற்றை முடித்து, திறந்து வைத்தும் வருகிறோம். இதை அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில்தான் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினோம். தற்போது திறந்து வைத்துள்ளோம்.

2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். 2011-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் இந்த மாவட்டத்தில் உள்ள தொகுதிக்கு என்ன திட்டத்தை கொடுத்தார்கள். எதுவும் செய்யவில்லை. ஆனால் திட்டமிட்டு ஊடகங்களிலும், மேடைகளிலும் இந்த ஆட்சி செயலற்ற ஆட்சி என சொல்லி வருகிறார்கள். நாங்கள் சொல்கிறோம், இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. செயல்படும் ஆட்சி என்பதை நிரூபித்து வருகிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது ஏதாவது குறை கண்டுபிடித்து போராட்டங்களை உருவாக்கி, கெட்டப்பெயரை ஏற்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

மக்களின் தேவையை அறிந்து, அம்மா விட்டுச்சென்ற பணியை செய்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்கிறார்கள். இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள் தெரியும். ஏற்கனவே எதிர்க்கட்சியினர் சில புள்ளி விவரங்களை தெரிவித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் சட்டசபையில் தகுந்த பதிலளித்துள்ளோம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் பூதக்கண்ணாடி வைத்து குறைகளை தேடி வருகிறார்கள். ஆனால் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி ஏற்பட்டபோதுகூட தமிழகத்தில் விலைவாசி உயர்ந்ததா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

1,000 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தால்கூட அடுத்த 15 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும். இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம். குடிமராமத்து திட்டத்தின் மூலமாக வண்டல் மண் இயற்கை உரமாக விவசாயிகளுக்கு கிடைத்தது. இதன்மூலம் ஏரி, குளங்கள் ஆழமாகின. தற்போது நல்ல மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களில் நீர்நிரம்பி வருகிறது. ரூ.1,000 கோடி நிதி தடுப்பணை கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலத்தடிநீர் சேமிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதா ஆசியோடு தமிழகம் செழிக்கும். எத்தனை எதிர்க்கட்சிகள் நினைத்தாலும் அம்மாவின் ஆட்சியை வீழ்த்தவோ, அசைக்கவோ முடியாது.

சீதோஷ்ணநிலை மாறுபாடு காரணமாக மழை காலங்களில் காய்ச்சல் வரும். அதை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பரவி உள்ளது. இந்த காய்ச்சலை உருவாக்கும் கொசு நல்ல தண்ணீரில் உருவாகிறது. எனவே, குடிநீருக்காக பயன்படுத்தும் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும். குளியலறைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடக் கூடாது. இந்த அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.23½ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்மூலம் ரத்த பரிசோதனை செய்ய 834 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ½ நிமிடத்தில் என்ன காய்ச்சல் என கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கமுடியும். இதுதவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விழாவில் எம்.பி.க்கள் செல்வக்குமார சின்னையன், பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு, கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்றார். இதில் பள்ளிபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் துணைத்தலைவர் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செந்தில் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சென்னை நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) தலைமை பொறியாளர் செல்வன் நன்றி கூறினார்.

Next Story