அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தோர் அலைக்கழிப்பு


அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தோர் அலைக்கழிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 PM IST (Updated: 9 Oct 2017 12:50 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தோரை பல மாதங்களாக அலைக்கழிக்கும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த காலங்களில் பிறப்பு, இறப்பினை பதிவு செய்ய தவறியவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற நீதிமன்றங்களை அணுகி உத்தரவு பெற்று அந்த உத்தரவின் அடிப்படையில் சான்றிதழ் பெறும் நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் உத்தரவு பெற்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற வாய்ப்பு இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறையை மாற்றி தமிழக அரசு, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பம் செய்து சான்றிதழை பெறலாம் என உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையில் பல பிரச்சினைகள் இருந்துவரும் நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ளோர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

பழைய நடைமுறையில் அந்தந்த ஊர்களில் உள்ள நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான உத்தரவை பெறுவது எளிதாக இருந்து வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் உள்ளோர் 3 ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டியது உள்ளதால் இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தாண்டி உரிய உத்தரவுகளை பெறுவது எளிதான காரியமாக இல்லை. மிகுந்த தாமதத்தை ஏற்படுத்துகிறது.

அதிலும் விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்த பின்னர் அங்கு நேரடியாக பலமுறை செல்ல வேண்டி உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் பொருட் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. அதிலும் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் விண்ணப்பதாரர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்காமல் அவர்களை அலைக்கழிக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் பிறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பம் கொடுத்தவருக்கு இதுவரை உரிய பதில்கள் அளிக்காமல் அலைக்கழிக்கும் நிலை இருந்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் பல்வேறு காரணங்களுக்காக பெற வேண்டிய பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை உரிய காலத்தில் பெற முடியாமல் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இந்த சான்றிதழ் பெறுவதற்கான தனிப்பிரிவு அமைத்து அதற்கான விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து தாமதம் இல்லாமல் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story