50 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்து வாய்க்காலில் லாரி விழுந்தது


50 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்து வாய்க்காலில் லாரி விழுந்தது
x
தினத்தந்தி 9 Oct 2017 7:00 PM IST (Updated: 9 Oct 2017 12:55 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே 50 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்து வாய்க்காலில் லாரி விழுந்தது. இதனால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கதிராமங்கலம் ஊராட்சிக்கும், தர்மதான புரம் ஊராட்சிக்கும் இடையே மன்னியாறு பாசன வாய்க்காலில் பாலம் உள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே வரும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சேதமடைந்த பாலத்தை அம்மையப்பன், தர்மதானபுரம், அக்ரஹாரம், காலிங்கராயன் ஓடை, கதிராமங்கலம், கன்னியாகுடி, திருப்பங்கூர், ஆத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கதிராமங்கலத்தில் இருந்து தர்மதானபுரத்துக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி, மேற்கண்ட இடத்தில் உள்ள சேதமடைந்த பாலத்தை கடக்க முயற்சித்தது. அப்போது திடீரென பாலம் உடைந்து லாரி வாய்க்காலில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களோடு லாரி டிரைவர் உயிர் தப்பினார். ஆனால் லாரி முற்றிலும் சேதமடைந்தது.

பாலம் உடைந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடைபட்டு அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, அரசு தற்காலிகமாக பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதற்குள் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். மேலும், உடைந்த பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story