திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விவசாயி சாவு உறவினர்கள் முற்றுகை


திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விவசாயி சாவு உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Oct 2017 7:30 PM IST (Updated: 9 Oct 2017 12:59 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விவசாயி திடீரென இறந்தார். உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்தவர் கோபால் (வயது 50). விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அப்போது கோபாலுக்கு மூளையில் ரத்த கசிவு உள்ளது தெரியவந்தது.

இதனால் அவசர சிகிச்சை பிரிவில் கோபாலுக்கு, தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதனைத்தொடர்ந்து உடல் நலம் சற்று குணமானதால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு அவரை மாற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிர் இழந்ததாக கூறி உறவினர்கள், கோபாலின் உடலை மருத்துவமனை முன்பு வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோபால், உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். முற்றுகை போராட்டத்தினால் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story