விழுப்புரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை


விழுப்புரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெரு, நந்தனார் தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விழுப்புரம் நகராட்சி சார்பில் மருத்துவமனை சாலையில் பயணியர் மாளிகை அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இப்பகுதிக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக கூட இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிற நிலையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்போக்குடன் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெரும்பாலானோர் குடிநீருக்காக காலி குடங்களை தூக்கிக்கொண்டு வெகு தொலைவு தூரம் நடந்தே பயணியர் மாளிகை அருகில் உள்ள குடிநீர் குழாய்க்கும், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவுவாயில் முன்புள்ள குடிநீர் குழாய்க்கும் வந்து மிகவும் சிரமத்துடன் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனே சரிசெய்து சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பெரிய காலனி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் பன்றிகள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் பெரியகாலனி பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர் முகாமிட்டு உடனே சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story