அகலார் கிராமத்தில் பள்ளிகள் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை


அகலார் கிராமத்தில் பள்ளிகள் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

அகலார் கிராமத்தில் பள்ளிகள் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, தூனேரி, அகலார், கொதுமுடி, பேரகல், நிட்டில், தவிட்டுமூக்கை ஆகிய கிராமங்களை சேர்ந்த ஊர்த்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பதாகைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட அகலார் கிராமத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி, சத்யசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருகுலம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஸ்டேட் வங்கி கிளை, மத்திய கூட்டுறவு வங்கி கிளை, கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி, தபால் நிலையம் ஆகியன உள்ளன.

அந்த பகுதியில் தினமும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள், வங்கிகளுக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் டாஸ்மாக் மதுக்கடையை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இங்கு மது குடிக்க வரும் மதுபிரியர்கள் தங்களது வாகனங்களை நெடுஞ்சாலையில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே, மது பிரியர்கள் போதையில் தள்ளாடியபடி தகாத வார்த்தைகளை பேசுவதால், பள்ளி மாணவ– மாணவிகளும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

இதனால் அவர்கள் டாஸ்மாக் மதுக்கடையை கடந்து செல்வதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகும் சூழ்நிலை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்து முன்னணி ஊட்டி மேற்கு நகர தலைவர் நாகராஜ் தலைமையில், அதன் நிர்வாகிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே காமாட்சி அம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ஒரு தனியார் பள்ளி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடையால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்.

மேலும் ஊட்டி அருகே உள்ள பாலகுலா பஞ்சாயத்து பகுதியில் ஒரு வீட்டில் ஜெபகூட்டம் நடந்து வருகிறது. அனுமதி இல்லாமல் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மநாடு பகுதி பொதுமக்கள் பட்டா கேட்டும், தடுப்புச்சுவர் கட்டி தரக்கோரியும் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

அம்மநாடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் பழங்குடியின இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள். அதில் 30 குடும்பத்தினருக்கு அரசு அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்து வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளனர்.

மீதம் உள்ள 10 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும். அப்பகுதியில் உள்ள ஒரு வீடு அருகே மண் சரிவு ஏற்பட்டதால், அந்த வீடு இடியும் நிலையில் உள்ளது. எனவே, மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் கட்டி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அருவங்காடு இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய்கள் பழுதாகி உடைந்து விட்டன. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. அதன் காரணமாக குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். ஆகவே, உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story