நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு இணையதளம்
நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதாலும், பாறைகள் அதிகமாக இருப்பதாலும், வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மலைச்சரிவுகளில் அனுமதி இன்றி பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் மலை சரிவு, நிலச்சரிவு, நீரோடை மற்றும் செங்குத்தான பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவும், வனப்பகுதியை ஒட்டி 200 மீட்டர் தள்ளியே அனுமதி வாங்கி கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. மேலும் யானை வழித்தடங்களான பொக்காபுரம், மசினகுடி, கல்லட்டி ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 26 கட்டிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் பேரூராட்சி உதவி இயக்குனர், ஊராட்சி உதவி இயக்குனர் வழியாக நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க புதிய இணையதளம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா www.nilgirisbuildingpermissions.org என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டி அனுமதி பெற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறியதாவது:–
நீலகிரி மாவட்டம் பூகோள ரீதியான அமைப்பின் படியும், புவியியல் தொழில்நுட்ப துறையின் அறிக்கையின் படியும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளின் ஆய்வறிக்கையின் படியும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டும் பணிகளை முறைப்படுத்த வேண்டி உள்ளது. அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுவதை தடுக்கும் வகையிலும், முறையாக தங்களது இடங்களில் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட காலம் தாமதம் இல்லாமல் அனுமதி பெற புதியதாக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஆபத்தான இடங்களிலும், செங்குத்தான மலைப்பகுதிகளிலும், மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளிலும் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட மாட்டாது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்டு உள்ள விவரத்தின்படி சரியாக விண்ணப்பித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இல்லையென்றால் விண்ணப்பத்தை இணையதளம் ஏற்றுக்கொள்ளாது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிகளில் வசித்து வரும் பொதுமக்கள் சரியான இடங்களை தேர்வு செய்து, முறைப்படி விண்ணப்பித்து கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டும். அதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குழு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.