ஆண்டிப்பட்டியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ, பொருட்கள் எரிந்து நாசம்


ஆண்டிப்பட்டியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ, பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 Oct 2017 3:30 AM IST (Updated: 9 Oct 2017 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் உள்ள பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், ஆண்டிப்பட்டி தக்காளி சந்தைக்கு எதிரே பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், வழக்கம்போல கடையை அடைத்து விட்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு 1 மணியளவில் கடையின் உள்ளே திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனை அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கண்டனர். இது குறித்து அவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ், மளிகை, பேன்சி பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் கடையில் இருந்த காய்கறிகளும் கருகின. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் புகார் செய்தார்.

அதில், கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.


Next Story