தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2017 10:45 PM GMT (Updated: 2017-10-09T23:29:05+05:30)

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜப்பன், சங்கரசுப்பு, இடைகமிட்டி செயலாளர்கள் நாகராஜன், தயாளன் மற்ம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் குப்பைகள் அள்ள வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை, ஓட்டல்களுக்கு தினசரி ரூ.50, மாதம் ரூ.1,500, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் தினமும் ரூ.110 அபராதம், வீடு, கடைகளுக்கு சதுர அடி கணக்கெடுத்து கட்டணம் உயர்த்தும் முடிவு போன்ற நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், வரி உயர்த்தும் நடவடிக்கையை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கலெக்டர் வெங்கடாசலத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வறட்சியால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நகராட்சி, பேரூராட்சிகளில் வீடுகள், கடைகள், ஓட்டல்களுக்கு குப்பைகள் வாங்க மாதாந்திர கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் இறங்கி உள்ளன.

குப்பைகளை பிரித்து தராதவர்களுக்கு அபராதம் கட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வீடுகள், கடைகளுக்கு வரி செலுத்தி வருகின்றனர். தற்போது சதுர அடி கணக்கு எடுத்து வரி வசூல் செய்வது என்று முடிவு செய்துள்ளதால், கூடுதலாக வரி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, குப்பைக்கான கட்டணம், வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.


Next Story