டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை பாதுகாப்பின்றி வைத்திருந்தால் அபராதம்


டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை பாதுகாப்பின்றி வைத்திருந்தால் அபராதம்
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 10 Oct 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம்,

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என முதல்–அமைச்சர் அறிவுறுத்திஉள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் தீவிரப்படுத்தி உள்ளார். இந்நிலையில் கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவ இணை இயக்குனர் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர், மாவட்ட மலேரியா அலுவலர், நகராட்சி துப்புரவு அலுவலர் ஆகியோர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர டெங்கு தடுப்பு பணியை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு புதிதாக கட்டிடம் கட்டிவரும் 2 இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பரப்பும் வகையில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை மூடிவைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருக்கும் நபர்களிடம் அதிகபட்சமாக ரூ.5000 அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story