நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்: டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்


நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்: டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2017 10:45 PM GMT (Updated: 9 Oct 2017 7:07 PM GMT)

நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில், டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது–

தமிழக முதல்–அமைச்சர் உத்தரவுப்படி நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சரிசெய்வது, குளோரின் கலந்த குடிநீரை வினியோகம் செய்வது போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் 3 நாட்களுக்குள் அனைத்து குடிநீர் குழாய் கசிவுகளையும் சரிசெய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல, ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் இன்றி பாதுகாத்திட வேண்டும்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிறந்த முறையில் சிகிச்சை வழங்கிட வேண்டும். அப்படி செய்தால், திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, குழந்தைகள், சிறுவர், சிறுமியர் அதிகளவில் காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சத்துணவு பணியாளர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருவதையும், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, இணை இயக்குனர் (நலப்பணிகள்) மாலதிபிரகாஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கருப்பையா, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் வரதராஜன், ஜெகவீரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story