டெங்குவை கட்டுப்படுத்த மருத்துவ அவசர காலத்தை அறிவிக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி


டெங்குவை கட்டுப்படுத்த மருத்துவ அவசர காலத்தை அறிவிக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2017 10:30 PM GMT (Updated: 2017-10-10T00:37:23+05:30)

டெங்குவை கட்டுப்படுத்த மருத்துவ அவசர காலத்தை அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல்,

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

பாபர் மசூதி இடிப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6–ந்தேதியை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவிப்பதுடன், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஹஜ் பயணத்துக்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், 9 இடங்களில் இருந்து மட்டுமே ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது கண்டனத்துக்கு உரியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை சாதாரண நிகழ்வு என்று முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்க முடியாது.

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி, திண்டுக்கல்லில் திப்புசுல்தானுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது வருத்தமளிக்கிறது. வக்பு வாரிய இடங்களை ஒப்படைப்பது தொடர்பாக, ஜமாத்தார்களிடம் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

டெங்கு கொசு ஒழிப்புக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக தகவல் வருகிறது. இதில், ஆட்சியாளர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவ அவசர காலத்தை அறிவிப்பதுடன், தனியார் மருத்துவர்களையும் அழைத்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததே டெங்கு பாதிப்புக்கு காரணமாகும்.

ஆட்சியை தக்க வைக்கவே மாநில அரசு முயற்சி எடுக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அரசின் தகவல் நம்பும்படியாக இல்லை. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். அ.தி.மு.க. அரசுக்கு அற்ப ஆயுள் தான். அதனை தீர்மானிக்கும் சக்தியாக மத்திய அரசு உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியில் சிலிப்பர் செல் இருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார். இதில் இருந்தே அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகிறது. ‘வாக்கிடாக்கி’ வாங்கியதில் ஊழல் நடந்ததாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story