பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை கலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு
விருதுநகர் மாவட்டத்தின் கிழக்குபகுதியில் உள்ள நத்தக்குளம், வரிசையூர் கிராம மக்கள் தங்களுக்கு பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.
நரிக்குடி அருகில் உள்ள ஆனைக்குளம் பஞ்சாயத்தில் நத்தக்குளம் கிராம விவசாயிகள் 145 பேர் பயிர் காப்பீட்டுத்திட்டத்துக்கான தவனை தொகையை கடந்த 2016–ம் ஆண்டு வீரசோழன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செலுத்தி உள்ளனர். இதே போன்று வரிசையூர் கிராம விவசாயிகள் 96 பேர் நரிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீட்டு தவனை தொகையை செலுத்தி உள்ளனர். வறட்சி காரணமாக நெற்பயிர்கள் கருகிவிட்டதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் தங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர். அப்பகுதியில் உள்ள பிற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் தங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்காமல் அதிகாரிகள் புறக்கணித்ததாக அவர்கள் கலெக்டரிடம் கூறினர்.
எனவே தொடர்ந்து பயிர்சாகுபடி செய்ய நிதி ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் பயிர்காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் இழப்பீட்டுத்தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் கேட்டுக்கொண்டனர்.