ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளத்தால் தடுப்பணை கட்டும் பணிகள் நிறுத்தம்
ஊத்துக்கோட்டை அருகே பலத்த மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பு அணை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
ஊத்துக்கோட்டை,
பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அணைக்கட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து வங்க கடலில் கலக்கிறது.
கடந்த 2015–ம் வருடம் பெய்த பேய் மழைக்கு அணை முழுவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்படி மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வங்க கடலில் கலந்தது.
இவ்வாறு தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு ஏதுவாகவும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு முடிவு செய்து ரூ.6.70 கோடி ஒதுக்கி உள்ளது.
தடுப்பணை கட்டும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தடுப்பணையை 200 மீட்டர் நீளத்துக்கு அமைக்கும் பணிகள் ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில் பூண்டி மற்றும் ஒதப்பை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் உப நதியான நெல்வாய்ஓடை நதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடந்து வந்த தடுப்பணை பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. தடுப்பணைக்காக ஆற்றின் குறுக்கே தோண்டிய ராட்சத பள்ளங்கள், பள்ளம் தோண்ட பயன்படுத்திய எந்திரங்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. வெள்ளம் வடிந்த பிறகே பணிகள் தொடங்கும் என தெரிகிறது.