குரோம்பேட்டையில் கடன் தொல்லையால் கணவன்–மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


குரோம்பேட்டையில் கடன் தொல்லையால் கணவன்–மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2017 11:15 PM GMT (Updated: 2017-10-10T01:52:50+05:30)

குரோம்பேட்டையில் கடன்தொல்லையால் கணவன்–மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவருக்கு குரோம்பேட்டை போஸ்டல் நகர், வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

இந்த வீட்டில், ராஜேஷ் (வயது 45), சரஸ்வதி (36) என்ற தம்பதியர் தங்களுடைய 2 மகன்களுடன் வாடகைக்கு வசித்து வந்தனர். ராஜேஷ் அதே பகுதியில் தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் ராஜேசின் மகன்கள் இருவரும் அருகில் உள்ள பாட்டி (சரஸ்வதியின் அம்மா) வீட்டுக்கு சென்றனர். அவர்கள் இரவில் அங்கேயே தங்கி விட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் உரிமையாளர் ஹரி, வீட்டு வாடகை வாங்குவதற்காக ராஜேசை பார்க்க வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் முன் அறையில் உள்ள மின்விசிறியில் ராஜேஷ் மற்றும் சரஸ்வதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த, ஹரி சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story