ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நகர்ப்புறத்தில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நகர்ப்புறத்தில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்
x
தினத்தந்தி 10 Oct 2017 5:45 AM IST (Updated: 10 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை நகர்ப்புறத்தில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு சன்வே ஓட்டலில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கினை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் புதுவைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரான்சு நாட்டின் ஏ.எப்.டி. வங்கி ரூ.454 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, வங்கியின் இயக்குனர் நிக்கோலஸ் போர்னேஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை மிகவும் பழமை வாய்ந்த புராதன சின்னங்கள், பிரெஞ்சு மற்றும் தமிழ் கலாசாரங்களை உள்ளடக்கிய நகரமாகும். பண்டைய காலத்தில் இந்தியாவின் சின்ன பிரான்சு என்றும் கிழக்கிந்திய பிரான்சின் ஆற்றுப்படுகை என்றும் புதுச்சேரி வர்ணிக்கப்பட்டது.

இன்றும் பழமையான கட்டிடங்கள், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளையும் அதன் பாரம்பரியத்தையும் புதுவை நகரம் பாதுகாத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் புதுவை அரசு ஸ்மார்ட் சிட்டி திட்ட வரைவை மத்திய அரசு வெளியிட்டது.

பிரெஞ்சு அரசு ஏ.எப்.டி. வங்கியின் மூலம் புதுச்சேரி அரசுக்கு அடிப்படை கட்டுமான ஆதாரத்திற்கு தேவையான தொழில்நுட்ப கருத்துகளை வழங்கிட ஏதுவாக 2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுவை அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் அடிப்படையில் புதுச்சேரிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.454 கோடி கடனுதவி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுவை பிராந்தியத்தில் நகர்ப்புறத்தில் விடுபட்டுள்ள இடங்களில் கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் அமைத்திடவும், காரைக்கால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் அமைத்திடவும், ஏனாம் மற்றும் மாகி பகுதி குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கும் ஏ.எப்.டி. வங்கி மூலம் கடன்பெற்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் பிரெஞ்சு நாட்டின் கம்பெனிகளை பார்க்கும்போது புதுச்சேரி அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் பங்குகொள்ள அவர்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இது புதுவை மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களிடையே நிலவிவரும் வலுவான தொடர்பை உறுதிபடுத்துவதாக உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உலகளவில் உள்ள நகரங்கள், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளை மிக வேகமாக நிறைவேற்றி வருகின்றன. அவற்றை நினைவில் கொண்டு புதுச்சேரி நகரத்தில் உணரப்படும் மக்கள்தொகை உயர்வு, குடிநீரின் தன்மை, சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல், நகர்ப்புற வாகன நெரிசல், வீட்டுவசதி, வேலையின்மை மற்றும் வாகன நிறத்த வசதி மேம்படுத்துதல் போன்றவற்றை கருத்தில்கொண்டு புதுவை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் நிபுணர்களும், அதிகாரிகளும் கலந்து ஆலோசிக்கவேண்டும். உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக புதுவை நகரத்தை புனரமைக்கவேண்டும்.

மேலும் புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடுகளுக்கு புதுவை அரசின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதால் அரசின் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த திட்டத்தை மிக திறமையாக செயல்வடிவாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.1,828 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். போக்குவரத்து நெரிசலை நீக்குவது, வாகன நிறுத்துமிடம், சுற்றுலா மேம்பாடு ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளன.

புதுவையில் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற ரூ.534 கோடி கடன்பெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. குடிநீரின் தன்மை நாளுக்குநாள் மாறி வருகிறது. நகரப்பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

விழாவில் இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் ஜீன் மார்க் பெனட் பேசும்போது, புதுவைக்கு தேவையான உதவிகளை வழங்க பிரெஞ்சு அரசு தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, சிவா, அரசு செயலாளர்கள் ஜவகர், மிகிர்வரதன், சுந்தரவடிவேலு உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கலந்துகொள்ள வந்தனர். ஆனால் அவர்களுக்கு விழாமேடையில் இடம் ஒதுக்காமல் 4–வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டித்து அவர்கள் விழாவினை புறக்கணித்தனர்.


Next Story