எந்த பிரச்சினையாக இருந்தாலும் அமைச்சர்களுடன் விவாதிக்க தயாராக உள்ளேன்


எந்த பிரச்சினையாக இருந்தாலும் அமைச்சர்களுடன் விவாதிக்க தயாராக உள்ளேன்
x
தினத்தந்தி 10 Oct 2017 12:00 AM GMT (Updated: 2017-10-10T02:08:08+05:30)

எந்த பிரச்சினையாக இருந்தாலும் அமைச்சர்களுடன் விவாதிக்க தயாராக உள்ளேன் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்களுக்கு புதிதாக ரத்தம் ஏற்றப்படுகிறது. இதனால் புதுவையில் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது.

இதையொட்டி பொதுமக்களிடம் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவர்னர் மாளிகையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியுடன் இணைந்து ரத்தான முகாமுக்கு கவர்னர் கிரண்பெடி ஏற்பாடு செய்திருந்தார். மேலும் தானே ரத்ததானமும் செய்தார். அவரை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் என 25 பேர் ரத்ததானம் செய்தனர்.

இதுகுறித்து கவர்னர் கிரண்பெடி கூறும்போது, ஒரு யூனிட் ரத்தம் குறைந்தது 6 பேரின் உயிரை காப்பாற்றும். எனவே பொதுமக்கள் தானாக முன்வந்து ரத்தத்தை தானமாக வழங்கவேண்டும் என்றார்.

அமைச்சர் கந்தசாமி ஜனாதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியது குறித்து கேட்டதற்கு, அமைச்சர் கந்தசாமி மட்டுமல்ல எந்த அமைச்சரும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்கலாம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஜனாதிபதி, பிரதமர் என யாருக்கு வேண்டுமானாலும் அமைச்சர் கடிதம் எழுதட்டும். அது அவரது உரிமை. புதுவை மக்களின் நலனுக்காக அமைச்சர் என்னை சந்திக்க மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களின் நலனுக்காகவும், புதுவை வளர்ச்சிக்காவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.


Next Story