இரும்பு கம்பியால் தாக்கி பெண் படுகொலை மாமனார் வெறிச்செயல்


இரும்பு கம்பியால் தாக்கி பெண் படுகொலை மாமனார் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 Oct 2017 5:00 AM IST (Updated: 10 Oct 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அருகே இரும்பு கம்பியால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேட்டூர்,

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (25). இவர்களுக்கு ஜோதிமணி (7), சங்கர் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 2, 1-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களின் வீட்டின் அருகே வேல்முருகனின் தந்தை பெரியசாமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பெரியசாமி மகனின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் தனியாக இருந்த மருமகள் அம்பிகாவிடம் குடும்ப பிரச்சினை காரணமாக வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெரியசாமி வீட்டின் சமையல் அறையில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மருமகள் அம்பிகாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த அம்பிகா துடிதுடித்து இறந்தார். மருமகளை அடித்துக்கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட பெரியசாமி அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

இதனிடையே, பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த, அம்பிகாவின் 2 மகன்களும் தங்களின் தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உடனே அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள், வேல்முருகனுக்கும் கருமலைக்கூடல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே, தகவல் அறிந்து அங்கு வந்த வேல்முருகன் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. அதேநேரத்தில் தகவல் அறிந்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பெரியசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story