ஆக்கிரமிப்பு, தடைகளை அகற்றி ராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும்


ஆக்கிரமிப்பு, தடைகளை அகற்றி ராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு, தடைகளை அகற்றி ராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது காவிரி ஆறு ராமவாத்தலை வாய்க்கால் கொடியாலம் மற்றும் காட்டு குளத்தான் மதகு பாசனதாரர்கள் சபையை சேர்ந்த விவசாயிகள் அதன் தலைவர் தியாகராஜன் தலைமையில் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள ராமவாத்தலை வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமார் 1,650 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. ராமவாத்தலை வாய்க்கால் மூலம் திண்டுக்கரை, எலமனூர், கொடியாலம், அந்தநல்லூர், அம்மன்குடி, பெரிய கருப்பூர் பகுதிகளை சேர்ந்த சின்ன கருப்பூர் விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர் காவிரி ஆற்றின் அனைத்து கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆனால் ராமவாத்தலை வாய்க்காலில் இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. பெட்டவாத்தலையில் மணல் அள்ளுவதற்கு காவிரியில் அமைக்கப்பட்ட சாலைகள், தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சாலை ஆகியவை தடையாக உள்ளன. வாய்க்காலின் முகத்துவாரம் ஆழமாகவும் பாசன வாய்க் கால் மேடாகவும் அமைந்துள்ளதால் தண்ணீர் மறுபடியும் காவிரி ஆற்றுக்குள்ளேயே சென்று விடுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ நீளத்திற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த தடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி ராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

லால்குடி ஊராட்சி ஒன்றியம் புதூர் உத்தமனூர் என்ற கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பெண்கள் கையில் காலி குடங்களுடன் வந்து இருந்தனர். அவர்கள் தங்களது கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. குளிக்கவும் தண்ணீர் இல்லை. குடிக்கவும் தண்ணீர் இல்லை என கூறி கோஷம் போட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி அதில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.

புள்ளம்பாடி வந்தலை கூடலூர் சாலையை சேர்ந்த மரகதம் என்ற பெண் தங்களது தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடத்தப்பட்டு வரும் பூக்கடைகளை அகற்றி விட்டு ஆவின் பால் பூத் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என பூ வியாபாரிகள் மனு கொடுத்தனர். திருச்சி கோர்ட்டு எதிரில் வ.உ.சி. சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி வ.உ.சி. நலப்பேரவை சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

மாணவர்-இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும், அரசு பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், நீட் தேர்விற்காக சிறப்பு பயிற்சி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் படத்தை முகத்திற்கு முன் பிடித்தபடி வந்தனர்.

திருப்பைஞ்சீலியை சேர்ந்த 16 வயது சிறுமி தான் வீட்டு வேலை செய்வதற்காக சென்ற இடத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கர்ப்பிணியாக்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கோரி மனு கொடுத்தார். 108 ஆம்புலன்ஸ்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த படி சம்பளம் வழங்காத தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரி கலெக்டரிடம் மனுகொடுத்தனர். 

Related Tags :
Next Story