நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் அமைச்சர் பேச்சு


நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் நடப்பு சம்பா சாகுபடிக்கு தேவையான பயிர் கடன், இடுபொருட்கள் வழங்குதல் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், டி.ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் பேசினர்.

ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

ரூ.7 ஆயிரம் கோடி பயிர் கடன்

கடந்த 6 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 61 லட்சத்து 60 ஆயிரத்து 856 விவசாயிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 374 கோடியே 26 லட்சம் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பயிர் கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் வரை 3 லட்சத்து 3 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு ரூ.19 கோடியே 32 லட்சத்து 4 ஆயிரம் அளவிற்கு பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

உரம் இருப்பு

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் அக்டோபர் மாதத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 930 டன் மொத்த உரத்தேவை இருக்கும். அதில் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பான 35 ஆயிரத்து 233 டன் உரங்கள் தேவையில், தற்போது கூடுதலாகவே கையிருப்பில் உள்ளது. எனவே கூட்டுறவு சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரக் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்கு விதை நெல் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சம்பா சாகுபடிக்கு தேவையான 570 டன் விதைகள் இருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நியாய விலை கடைகள் திறப்பு

முன்னதாக திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மகாலெட்சுமி நகர், அரியமங்கலம் ஜெகநாதபுரம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில் ‘சம்பா தொகுப்பு திட்டத்திற்காக ரூ.41 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்க போதுமான உரம் இருப்பு உள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் உரம் மேலும் வழங்கப்படும். தரமான விதைகள் வழங்கப்படுகிறது. முதல்- அமைச்சர் கொண்டு வந்த குடிமராமத்து திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததன் காரணமாக அனைத்து குளங்கள், ஏரிகள் நிரம்பி உள்ளன. ஸ்மார்ட் அட்டையில் முகவரி மாற்றம், புகைப்படம் உள்பட திருத்தங்கள் செய்ய வேண்டியது இருப்பதால் தற்போது அவை வினியோகம் செய்யப்படவில்லை. அவை சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் வழங்கப்படும்’ என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி வேலுமணி, தாசில்தார்கள் முத்துசாமி, மணிகண்டன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story