கனமழை: பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் செத்தன


கனமழை: பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் செத்தன
x
தினத்தந்தி 9 Oct 2017 11:15 PM GMT (Updated: 9 Oct 2017 9:09 PM GMT)

பர்கூர் அருகே பெய்த கனமழையால் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் செத்தன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக பர்கூர் சுற்று வட்டாரத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் சில இடங்களில் ஏரியையொட்டி தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே பர்கூர் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் பர்கூர் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 45) என்பவரின் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அந்த பண்ணையில் இருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி செத்தன.

இந்தநிலையில் நேற்று காலை கோழிப்பண்ணைக்கு சென்ற சுந்தர்ராஜன் அங்கு இருந்த கோழிக்குஞ்சுகள் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுகுறித்து கூறியதாவது:-

நான் கடந்த 15 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறேன். கடந்த 15 நாட்களுக்கு முன்பு எனது பண்ணையில் 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை விட்டேன். தற்போது பெய்துள்ள கனமழையால் பண்ணையில் மழைநீர் புகுந்ததில், தண்ணீரில் மூழ்கி 15 நாள் வயது கொண்ட 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் செத்து விட்டன. இதனால் எனக்கு ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story