மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது பெண் பலி; கணவன்- மகன்கள் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது பெண் பலி; கணவன்- மகன்கள் படுகாயம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் மற்றும் மகன்கள் படுகாயமடைந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் பிரபு(வயது32). லாரிடிரைவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(28). இவர்களது மகன்கள் சுதீப், கிரிவாசன்.

நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் பிரபு தனது மனைவி மற்றும் மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக் கிளில் அணைக்கரைக்கு திரும்பி சென்றனர். கும்பகோணம் சந்தனாள்புரம் பைபாஸ் சாலை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது பின்புறம் வந்த அரசு பஸ் பிரபு சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பிரபு மற்றும் அவருடைய 2 மகன்களும் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்ப கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்து தப்பிய அரசு பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள். பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அணைக்கரை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Related Tags :
Next Story