தொழில் அதிபரிடம் ரூ.20½ லட்சம் மோசடி 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்


தொழில் அதிபரிடம் ரூ.20½ லட்சம் மோசடி 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 10 Oct 2017 3:06 AM IST (Updated: 10 Oct 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரிடம் ரூ.20½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் சிராக் பாட்டீல் (வயது 34). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து நிறுவனத்தின் பெயரில் இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க இந்தியாவில் கிடைக்கும் குறிப்பிட்ட விதைகளை வாங்கி அனுப்பினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.

இதை நம்பிய தொழில் அதிபர் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த மும்பையை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து ரூ.20½ லட்சத்திற்கு விதைகளை வாங்கி அனுப்பினார். ஆனால் அதன்பிறகு அவரால் இ-மெயில் அனுப்பியவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

ஜெயில் தண்டனை

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு கும்பல் இ-மெயில் மூலம் நூதன முறையில் அவரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கில் தொடர்புடைய நைஜீரியர் ஒமன் (33), அகர்வால், டோனி மைக்கிள், திரிபாதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணையின் போது முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட ஒமன் மற்றும் திரிபாதியின் குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே கோர்ட்டு அவர்ளை விடுதலை செய்தது. அகர்வால் மற்றும் டோனி மைக்கிளுக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

Next Story