பயந்தரில் கடத்தப்பட்ட துணி வியாபாரி 9 நாட்களுக்கு பிறகு மீட்பு 7 பேர் கைது
பயந்தரில் கடத்தப்பட்ட துணி வியாபாரி 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.
வசாய்,
தானே மாவட்டம் பயந்தர் 150 அடி சாலையில் உள்ள ஸ்ரீசாய் டவர்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜிதேந்திர ஜோஷி (வயது32). துணி வியாபாரி.
கடந்த 29-ந் தேதி நள்ளிரவு கட்டிடத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த இவரை காரில் வந்த ஒரு கும்பல் கடத்தி சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
முதற்கட்டமாக ஜிதேந்திர ஜோஷியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போது, கஜானன் ஹராட் (32) என்ற இன்னொரு துணி வியாபாரியிடம் ஜிதேந்திர ஜோஷி துணி வாங்கியதில் ரூ.12 லட்சம் கொடுக்காமல் பிரச்சினை இருந்து வருவது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கஜானன் ஹராட் தான் பணப்பிரச்சினை காரணமாக ஜிதேந்திர ஜோஷியை ஆட்களை வைத்து கடத்தியது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் பணம் கேட்டு ஜிதேந்திர ஜோஷியின் குடும்பத்திற்கு போன் செய்து கூட மிரட்டவில்லை. இந்த நிலையில், ஜிதேந்திர ஜோஷி பிவண்டியில் உள்ள ஒரு குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 9 நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் போலீசார் அதிரடியாக அங்கு சென்று ஜிதேந்திர ஜோஷியை மீட்டனர். மேலும் அவரை கடத்தியதாக கஜனான் ஹராட், அவ்துத் செலார் (27), மயுரேஷ் (28), யாதிஷ் தேசாய் (28), பிரத்மேஷ் (27), வருண், ரமேஷ் யாதவ் (28) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், பணத்தை கேட்டு அவர்கள் ஜிதேந்திர ஜோஷிக்கு மூன்று நாட்கள் வரை உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதை செய்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story