தொழில் அதிபரிடம் விற்ற சொகுசு காரை திருடிய ஷோரூம் உரிமையாளர் கூட்டாளிகள் 2 பேர் கைது


தொழில் அதிபரிடம் விற்ற சொகுசு காரை திருடிய ஷோரூம் உரிமையாளர் கூட்டாளிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2017 3:22 AM IST (Updated: 10 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் தொழில் அதிபரிடம் விற்ற சொகுசு காரை ஷோரூம் உரிமையாளரே திருடிய சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக அவருடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

நவிமும்பை கார்கரை சேர்ந்தவர் சத்பால் சிங் (வயது44). தொழில் அதிபர். இவர் அண்மையில் தானேயில் உள்ள ஒரு ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார்.

சம்பவத்தன்று இவரது அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த கார் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்பால் சிங் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது, தான் அந்த காரை வாங்கிய ஷோரூமின் உரிமையாளர் ஜெய்சிங் தாக்கூர் உள்பட மூன்று பேர் காரை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

2 பேர் கைது

இதுபற்றி சத்பால் சிங் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் கார் ஷோரூம் உரிமையாளர் ஜெய்சிங் தாக்கூர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவருடன் கார் திருட்டில் ஈடுபட்ட விஜய் கவாரே (வயது35), சந்தீப் பாட்டீல் (34) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் ரபோடி பகுதியில் மூடிகிடக்கும் ஒரு தொழிற்சாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் சத்பால் சிங் அந்த காரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் தலைமறைவான ஜெய்சிங் தாக்கூரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story