ராய்ச்சூர் அருகே துணிகரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.22 லட்சம் கொள்ளை
ராய்ச்சூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.22 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராய்ச்சூர்,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் அருகே உள்ள ஹட்டிகேம் பகுதியில் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையம் மூடப்பட்டு கிடந்தது. இந்த வேளையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்தின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர், அவர்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்தனர். அதைத்தொடர்ந்து, ஏ.டி.எம். மையத்தை உடைத்த மர்மநபர்கள் அதன் உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். நேற்று காலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வங்கி அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரூ.22 லட்சம் கொள்ளை
அதன்பேரில், வங்கி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் லிங்கசூகூர் போலீசில் புகார் செய்தனர்.
அதில், ஏ.டி.எம். மையத்தில் ரூ.40 லட்சம் பணம் வைக்கப்பட்டதாகவும், வாடிக்கையாளர்கள் ரூ.18 லட்சம் ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தி எடுத்துள்ளனர். மீதம் ரூ.22 லட்சம் இருந்துள்ளது. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story