கர்நாடகத்தில் 13-ந் தேதி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல் கூட்டமைப்பு தலைவர் தகவல்
கர்நாடகத்தில் வருகிற 13-ந் தேதி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கர்நாடக பெட்ரோல் விற்பனை வர்த்தகர்களின் கூட்டமைப்பு தலைவர் கூறினார்.
பெங்களூரு,
பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் உள்ள வர்த்தக முரண்பாடுகளை களைய வேண்டும் எனக்கூறியும், எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றுவதாக கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகிற 12-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 13-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை இந்தியா முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அடைக்கப்படும் என்று ஒருங்கிணைந்த பெட்ரோலிய பொருட்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 27-ந் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் நிறுத்தப்படும். அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லையெனில் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்யப்படாது எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து கர்நாடக பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திர நாத் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
உபகரணங்கள் வழங்குவது
நிலுவையில் உள்ள முதலீடுகளை திரும்ப வழங்குவது, ஒவ்வொரு 6 மாதத்துக்கும் வர்த்தகர்களின் விற்பனை விகிதத்தை மாற்றியமைப்பது, பெட்ரோல் பொருட்கள் வீணாவதை தடுப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பது, பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி செல்லும்போது போக்குவரத்தில் நிலவும் பிரச்சினையை சரிசெய்வது, எத்தனால் பயன்பாட்டுக்கு சரியான உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பெட்ரோல் வர்த்தகர்களிடம் கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 4-ந் தேதி எண்ணெய் நிறுவனங்கள் கூறின. இருப்பினும், இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக்கூறி நாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அடைக்கப்பட உள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கர்நாடகத்திலும் 13-ந் தேதி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரியில் சேர்க்க...
மேலும், அவர் கூறுகையில், “ ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கொள்கையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களையும் சரக்கு மற்றும் சேவை வரியில் சேர்த்தால் தான் ‘ஒரே நாடு ஒரே வரி‘ என்பது பொருத்தமானதாக இருக்கும். பெட்ரோலிய பொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்வது வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறையே மறுபரிசீலனை செய்ய வேண்டும். விற்பனை ஒழுங்குமுறை வழிக்காட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி பெட்ரோலிய விற்பனையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இது நியாயமற்றது. இதையும் திருத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story